ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண் டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் இலங்கைக்கு மனித உரிமை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் 58 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர் பில் பரிசீலனை செய்ய வேண்டுமாயின் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்,
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்ததுதல், புதிய மனித உரிமை செயற்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துதல், தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் தொடர்பான கொள்கையை மீளாய்வு செய்ய புதிய அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்களை பகிர்தல், வடக்கில் தனியார்களின் காணிகள் அனைத்தையும் உடனடியாக மீளக் கையளித்தல், தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசிய மீள் குடியேற்றம் தொடர்பான செயற்பாட்டிற்கு புதிய கொள்கையை அறிமுகப்படுத்துதல், இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் விரைவாக குடியேற்றுதுதல், காணாமல்போனோர் தொடர்பாக சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்த 58 நிபந்தனைகளில் இடம்பெற்றுள்ன.
அந்தவகையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்ய வேண்டுமாயின் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிபந்தனைகள் வெளிவிவகார அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அந்தவகையில் அடுத்த வாரம் பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அதற்காக இலங்கையின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தலைமையிலான தூதுக்குழுவினர் இவ்வாரம் பிரஸ்ஸல்ஸ் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த விடயங்கள் தொடர்பில் முன்னேற்றங்களை இலங்கை வெளிக்காட்ட வேண்டுமென்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இந்த வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அவை பலனளிக்கவில்லை. அந்தவகையில் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.
இதேவேளை இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.