உணவு விஷயத்தில் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, எந்தவித துரித உணவும் பாதுகாப்பானது இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. சமீபத்தில் கே.எப்.சி.-யில் கோழிக்கு பதிலாக வறுத்த எலி பரிமாறப்பட்டதாக பேஸ்புக்கில் வைரலாக ஒரு படம் பரவி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் வறுத்த கோழி கேட்டுள்ளார் டேவோர்ஸ் டிக்ஸன் என்பவர். ஆனால் அவருக்கு வந்த கோழியோ நன்றாக வறுக்கப்பட்ட எலியை போன்று இருந்துள்ளது. இது பற்றி உணவகத்தின் மேலாளரிடம் தான் விளக்கம் கேட்டதாகவும் அவரும் அதை எலி என்று ஒத்துக்கொண்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டிக்ஸன்.
அந்த புகைப்படத்தை இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஆனால், இது பற்றி விளக்கம் அளித்துள்ள கே.எப்.சி. ”இது பற்றி தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், அவரது குற்றசாட்டை நிரூபிக்கும் ஆதாரஙகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எங்களுக்கு அனுப்பபடும் கோழிகள் பலவடிவங்களில் வருவது வாடிக்கையானது தான். இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள டேவோர்ஸ் டிக்ஸனை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஆனால், அவர் ஒத்துழைக்க மறுக்கிறார்” என தெரிவித்துள்ளது.
டேவோர்ஸ் டிக்ஸன் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் அதை எலி என்றுதான் சொல்வார்களே தவிர ஒரு போதும் கோழி என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்.