– கஹட்டோவிட்ட ரிஹ்மி –
தேசிய தொழில்சார் தகைமை முறைமை – National Vocational Qualification (NVQ)
அதிகமானோர் NVQ பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அறியாதும் இருக்கலாம். இந்த முறைமை ஆனது ஒருவருக்கு தொழில் சார்ந்த தகைமையை கொடுத்து விடும். NVQ சான்றிதழ் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டால் தகுதியான தொழில் ஒன்றைத் தேடிப்பெற்றுக்கொள்வது இலகுவாகி விடும்.
அண்மைக்காலங்களில் அரச, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் கூட NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
தகவல் தொழினுட்பத்துறை, இலத்திரனியல், மின்னியல், கணக்கியல், தட்டச்சு, கட்டட நிர்மாணிப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இத் தகைமையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எமது நாட்டில் காணப்படுகிறது.
நாட்டிலுள்ள பாரம்பரியக் கல்வி முறையானது ஆரம்பத்தில் இணையும் மாணவர்களில் 1-2 சதவீதமானோர்க்கு மட்டுமே பல்கலைக்கழகம் சென்று பட்டதாரி ஆகும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த நிலையில் மிகுதியாகவுள்ள 98 சதவீதமான மாணவர்களுக்கு மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான தேசிய தொழில் சார் தகைமை முறைமை – National Vocational Qualification (NVQ) அறிமுகப்படுத்தப்பட்டது.
NVQ சான்றிதழைப் பெறுவதற்கான அடிப்படைத்தகைமைகள் என்ன?
இதற்கு பெரியதொரு பெறு பேறு தேவையில்லை. சில பாடநெறிகள் தரம் 9 வரை படித்தவர்களுக்குக் கூட பட்டப்படிப்பு வரை கற்பதற்கு இங்கு வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு பாடநெறியைப் பொறுத்து அவற்றுக்கான தகைமைகள் வேறுபடுகின்றன. இது பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.techedu.gov.lk என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்.
NVQ கற்கை நெறிகளை எங்கு பயிலலாம்;?
நாடெங்கிலும் உள்ள அரச தொழினுட்பவியல் கல்லூரிகளிலும் (College of Technology), தொழினுட்பக் கல்லூரிகளிலும் (Technical Colleges), VTA (Vocational Training Authority) போன்ற பகுதி அரச சார்பான கிளைகளிலும், NAITA போன்ற நிறுவனங்களிலும் கற்கலாம்.
தொழினுட்பவியல் மற்றும் தொழினுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளை முற்றிலும் இலவசமாகக்கற்கலாம். அத்தோடு பஸ் மற்றும் புகையிரதங்களுக்கான பருவ கால பயணச்சீட்டுகள் சலுகை விலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் 1 வருடத்திற்கு மேற்பட்ட பாடநெறிகளை பயிலும் மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இலங்கையிலுள்ள சகல தொழினுட்பக் கல்லூரிகளுக்கும் தாயாய் விளங்குவது கொழும்பு 10 மருதானையில் அமைந்திருக்கும் மருதானை தொழினுட்பவியல் கல்லூரியாகும். இது 1893 ஆம் ஆண்டு ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று நாடு பூராகவும் உள்ள 38 தொழினுட்பக்கல்லூரிகளில் முதன்மையானது இதுவாகும்.
VTA போன்றவற்றில் சிறிய தொகைப் பணம் அறவிடப்படும் (பாடநெறிகளைப் பொறுத்து)
NVQ உள்ள மட்டங்கள் எத்தனை?
NVQ ஆனது 7 மட்டங்களைக்கொண்டது.
1 – 4 வரை சான்றிதழ் மட்டமாகும் (Technician Level). இவற்றை நாடெங்கிலும் உள்ள 38 தொழினுட்பக்கல்லூரிகளில் பயிலலாம்.
1 ஆம் மட்டம் – அடிப்படை, ஆரம்ப ஆற்றல்கள் உள்ள கைப்பணியாளர்கள்
2ஆம் மட்டம் – அடிக்கடி மேற்பார்வையின்கீழ் செயலாற்றும் கைப்பணியாளர்கள்
3ஆம் மட்டம் – சிறிய மட்டத்திலான மேற்பார்வையின் கீழ் செயலாற்றக்கூடிய கைப்பணியாளர்கள்
4ஆம் மட்டம் – சுயாதீனமாகச் செயலாற்றக்கூடிய கைப்பணியாளர்கள் (Technicians)
5 – 6 வரை டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா மட்டமாகும். மாகாணத்திற்கு தலா 1 வீதம் காணப்படும் தொழினுட்பவியல் கல்லூரிகளில் (College of Technology) பயிலலாம்.
5 ஆம் மட்டம் – மேற்பார்வையாளர்கள் (Supervisors)
6 ஆம் மட்டம் – முகாமையாளர்கள் (Managers)
7 – பட்டதாரி (திட்டமிடலாளர் / Planner)
கடைசி மட்டமான இதனை இரத்மலானையில் அமைந்துள்ள தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் (Univotec) இல் பயிலலாம்.
NVQ சான்றிதழின் அனுகூலங்கள்
NVQ சான்றிதழ் ஒரு பயிற்சிச் சான்றிதழல்ல. அது உங்கள் திறன்களை சான்றுபடுத்தும் சான்றிதழாகும். அது தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகும். அதற்கான தொழிலில் சம்பந்தப்பட்ட NVQ மட்டத்திற்குரிய திறன்களை நீங்கள் கொண்டிருப்பதை அது உறுதி செய்யும்.
இக்கட்டமைப்பைல் உயர் மட்டங்களுக்கான தகைமையைப் பெறுவதற்கும் அனுபவமும் தேர்ச்சியும் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திறன்களைப் பெறுவதற்குமான வாழ்க்கைத் தொழில் வழியுமாகும்.
NVQமுறைமை ஒரு திறன் மதிப்பீட்டு முறைமையாக விருப்பத்துடன் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கான போக்கினைக் கூடுதலாகக் கொண்டது.
திறன் தரங்கள், கைத்தொழிலில் உள்ள வாண்மைத்துவ ரீதியாக தேர்ச்சி மிக்க நபர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறான திறன்சார் கைத்தொழிலில் மேற்கொள்ளப்படவேண்டிய தொழிற்பாடு களையும் கொண்டுள்ளன. ஆகவே NVQ சான்றிதழை வைத்திருப்போருக்கு தொழிலை நாடுவது மிகவும் இலகுவாகும்.
NVQ சான்றிதழைப் பெற்றிருப்போர் உயர்மட்ட தகைமை களைப் பெறுவதில் உற்சாகமுற்றிருப்பார்களாயின் தமது வாழ்க்கைத் தொழில் விருத்தியை மேம்படுத்துவதற்கு இந்த முறைமை ஊக்கமளிக்கிறது.
பாடநெறிகள் குறித்த தகவல்கள் மற்றும் வேறு விபரங்களைப் பெறுவதற்கு,
மூன்றாம் நிலைக்கல்வி ஆணைக்குழு,
354/2, எல்விற்றிகல மாவத்தை,
கொழும்பு 05
தொலை பேசி எண் : 0115367712
இணையத்தளம் : www.tvec.gov.lk
இலங்கை தொழிநுட்பவியல் கல்லூரி
ஒல்கொட் மாவத்த, மருதானை,
கொழும்பு 10
தொலை பேசி எண் 011-2324177, 011 2423653
இணையத்தளம் : www.techedu.gov.lk