பிறந்து வளர்ந்த மண்ணில் நிற்கிறேன் SSP Majeed
2015 பொதுத் தேர்தல் – திகாமடுல்ல மாவட்டம்
வாக்காளப் பெரு மக்களுக்கான திறந்த மடல்!
சில உண்மைகள்!
நான் செல்லுவது எல்லாம் உண்மை!
உண்மையைத் தவிர வேறில்லை.
சாட்சிக் கூட்டில் சாட்சியம்,
கூறுகின்றேன்.
நீதிபதிகள் நீங்கள், தீர்ப்பு எழுதுங்கள்!
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா!
யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா!
எழில் மிகு அறுகம் குடாவும்,
வனப்பு மிகு மணல் மேடும்,
கடல் சூழ்ந்து அலை மோதும்,
கொட்டுக் கல்லும்,
பசுமை தரும் காணி நிலங்களும்,
மயிலாடும் மரச்சோலைகளும்,
காடேறும் யானைகளும்,
காட்சி தரும் காட்டூராம்,பொத்துவில்.
இங்கு தான் நான் பிறந்தேன். கல்வி பயின்றேன். பொலிஸ் சேவையில் இணைந்தேன். றகர் விளையாட்டில் பொலிசிற்கும், இலங்கைக்கும் தலைமை தாங்கினேன். தேசிய மட்டத்தில் புகழ் சேர்த்தேன். இவை பலருக்கு உதவ உறுதுணை புரிந்தது. சேவைக்கு அரசியல் அதிகாரம் வேண்டும்.
இருள் சூழ்ந்திருந்த பொத்துவில் புறந்தள்ளப்படக்கூடாது, என்பதற்காகவே, 1989 ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினேன். பெரும்பான்மை இனத்தவர் மூவர் யானைச்சின்னத்தில் வெற்றி பெற்றனர். தேசியப்பட்டியல் மர்ஹூம் அப்துல் மஜீட், ஏ.ஆர். மன்சூர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அமைச்சர்களாகிய அவர்கள் சமூகத்திற்காக நல்லதைச் செய்தார்கள். நானும் மீண்டும் சேவையில் இணைந்து கொண்டேன். கிழக்கு மாகாணத்தின் சிவில், பாதுகாப்பு இணைப்பதிகாரியானேன்.
1990 பயங்கரவாதம் உக்கிரமம் அடைந்தது. மக்கள் அநியாயமாக அறுக்கப்பட்டார்கள், குற்றுயிர் ஆக்கப்பட்டார்கள். எத்தனையோ கொலைகள் குண்டு வெடிப்புகள், வீதிகளில், வயல் காணிகளில் நடமாட முடியாத காலம். வீட்டில் வெளிச்சம் போட்டு வாளும், கத்தியும் ஏந்தி தூக்கமின்றி உயிருக்கு பயந்து அலைந்த காலம். ஊர்கள் எரிக்கப்பட்டு சாம்பல் மேடாக்கப்பட்டது. ஜனாசாக்கள் அடக்க முடியாத நிலையில் அங்கும் இங்கும் வீசப்பட்டது. வீதிகள் வெறிச்சோடி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தபோது அரசியல் வாதிகள் ஓரத்தில் ஒதுங்கி நின்றார்கள்.
பயங்கர வாதிகளின் பட்டியலில் பெயரிடப்பட்டு குறிபார்க்கப்பட்டிருந்த நான் மக்களின் நலனுக்காக பகல், இரவாய் ஓடினேன். பல உயிர்களையும், கிராமங்களையும் பாதுகாத்தேன். பயங்கரவாதத்தை வேருடன் அழிப்பதற்கு அரச அதிகாரியாக செயற்பட்டேன். 1994 இல் மீண்டும் பொதுத்தேர்தல் வந்தது. மாமனிதர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் என்னையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விமானத்தில் இணைந்த விமானியாக பயணிக்க பலமுறை அழைப்பு விடுத்தார். பேரின வாதிகளின் சதி வலையில் சிக்கியிருந்த என்னால் அவர்களோடு பயணிக்க முடியவில்லை.
தேர்தலில் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் இனத்திற்கான கோசமும் உரிமைக்குரலும் எனது சேவையை மறக்கடிக்கச் செய்தது. நான் சேர்த்த வாக்குகள் மீண்டும் பெரும்பான்மை இனத்தவர் மூவர் பாராளுமன்றம் செல்ல வழி செய்தது. அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னர் இரு வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. யாக்கப் பட்டேன். அதனைத்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினரானேன். அங்கும் எதிர் கட்சி ஆசனமே கிடைத்தது. அவ்வப்போது முடிந்ததைச் செய்தேன்.
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் உயர் சிந்தனைகளும், கொள்கைகளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கும் என்று, எண்ணியே அதில் இணைந்தேன். அங்கு தலைமையின் உள்ளத்தில் முஸ்லிம் உணர்வு இல்லை. உதட்டில் மட்டும் இருப்பதை கண்டேன். கட்சியின் உயர்பீட உறுப்பினராக இருப்பதற்கான தகைமை “முனாபிக்” அது என்னிடம் இல்லை. காரணத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்து விலகிக் கொண்டேன்.
ஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைந்தேன். நல்லாட்சிக்கான தலைமை மைத்திரியை வரவேற்று வாக்குச்சேர்க்க பொத்துவிலில் மேடை அமைத்தேன். அழைப்பின்றி குறுக்கு வழியால் மேடை ஏறிய ஹக்கீம் யானையில் மறைந்து எனக்கு கிடைக்க இருந்த ஆளுனர் பதவிக்கு ஆப்பு வைத்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் என்னையும் மற்றும் பிரபல்யமான இரண்டு சிங்கள வேட்பாளர்களையும் ஐ.தே. கட்சி வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கட்சியை வேண்டினேன். ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக நான் போட்டி இடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த ஹக்கீம் காய் நகர்த்தினார். முஸ்லீம்களை பணத்திற்கு வாங்க முடியும் என்று சிந்திக்கும் இனத்துவேசி தயாகமகே பிரபல்யமான சிங்கள வேட்பாளர்கள் மூவரின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் சேர்த்து ஒப்பமிடச்செய்து வாக்குச் சேர்ப்பதற்காக சில முஸ்லீம்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளார். இந்த நிலையில் முஸ்லிம் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெறமுடியாது என்ற முன் அனுபவம் பெற்ற நான் சிந்திக்க தவறவில்லை. எமது மாவட்டத்தில் 72 சதவீதமான தமிழ் பேசும் பூர்வீகக் குடிகள் வாழுகின்றோம். நாம் வந்தேறு குடிகளால் ஆளப்படுகின்றோம். தொடர்ந்தும் பல பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒற்றைத்தொகுதியான அம்பாறைக்கு நமது வாக்குகளே பெற்று கொடுக்கிறது.
இதனை விரும்பாத மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் தனி மனிதனாக போராடி போராளிகளின் அரவனைப்போடு மாவட்டத்தில் வெற்றி கண்டார். தலைமை தாங்கினார். மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் ஆத்மா சாந்தி பெற இம் மாவட்டத்தில் பெரும் பான்மையாக வாழும் முஸ்லீம்கள் ஆளுபவர்களாக மாற வேண்டும்.
எனது 30 வருட பொலிஸ் சேவை, 25 வருட அரசியல் அனுபவம் என்னைத் தீர்க்கமாக சிந்திக்கச் செய்தது. சதிகாரர்களுக்கெல்லாம் மேலான கருணையாளன் என்னை அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்துள்ளான். யாவும் நன்மைக்கே. மயில் சின்னத்தில் வாக்கு கேட்கின்றேன். மயிலின் வெற்றி மாமனிதர் அஷ்ரஃப் அவர்களின் கொள்கையோடு முஸ்லிம் சமூகத்தின் குரலாகவும், பாதுகாவலனாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.
பொத்துவிலில் நான் வளர்த்த
நச்சுப் பாம்புகள்- எச்சில் தின்று
ஏழைகளை ஏமாற்ற முனைவது
வேதனை தருகிறது.
ஏமாறுபவர்கள் இங்கில்லை.
விழிப்புடன் செயற்படுங்கள்!
“உங்களுக்கு உதவ எனக்கு உதவுங்கள்”
தீர்ப்பை எழுதி பொறுத்திருந்து பாருங்கள்.
“மயில்” 03 ஆம் இலக்க வேட்பாளர்.
எம். அப்துல் மஜீட்
முன்னாள் SSP, MP, MPC