Breaking
Thu. Dec 26th, 2024

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்”- ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன்  மீது, கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் மீது இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (13) கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) இரவு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை முடித்துவிட்டு, வவுனியாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வந்துகொண்டிருந்த போது, அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் வைத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் தலைவர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனத்தை வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, வாகனத்தில் அவர் இருப்பதைக் கண்டு, மஸ்தானின் ஆதரவாளர்கள் “ரிஷாட் பதியுதீன் உள்ளே இருக்கின்றார், அவரை தாக்குங்கள்” என்று கூச்சலிட்டுள்ளனர்.  அதன்பின்னர், வாகனங்கள் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கில், மிகவும் திட்டமிட்ட முறையில்  இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களே அவரைக் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவரது ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி சம்பவம் இடம்பெற்றபோது, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். காதர் மஸ்தானின் அடியாட்களை கட்டுப்படுத்த அவர்கள் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களில் ஒருவருக்கு, வைத்தியசாலையில் வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலைமை தொடர்பில், ரிஷாட் பதியுதீன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறித்த தாக்குதல் சம்பவம் தொலைக்காட்சி செய்திகள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினமான விடயம் அல்ல.

மேலும், ரிஷாட் பதியுதீனோ அல்லது அவரது ஆதரவாளர்களினாலோ எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறாத பட்சத்தில், அமைதியாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதே, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்தக் குண்டர்கள் செயற்பட்டுள்ளனர்.  இந்தச் சம்பவம் தொலைக்காட்சி செய்திகளிலும் ஒளிபரப்பாகின. அந்தக் காணொளிகளில் இருந்து தேவையான விபரங்களைப் பெற்று, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட  அடாவடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? என்பதை பொலிஸார் எளிதாகக் கண்டறிய முடியும்.

மேலும், நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் ரிஷாட் பதியுதீன் செய்த முறைப்பாட்டில், குறித்த வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட சில நபர்களின் பெயர் விபரங்களை,    குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் பொலிஸார் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்களை அந்த குண்டர் குழுவினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

பொதுமக்களை பாதுகாப்பது காவல்துறையின் கடமை. என்றாலும், அந்தக் கடமையை காவல்துறை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்கள் நிராதரவாகிவிடுகின்றார்கள். இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் தவறியமையினாலும் ரிஷாட் பதியுதீன், மேற்படி சம்பவம் தொடர்பில் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்கள் தொடர்பில் உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறும், ரிஷாட் பதியுதீனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பை துரிதமாக வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post