Breaking
Sat. Nov 23rd, 2024

கைவிடப்பட்டு வரும் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு கொரியா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்புக்களை பெற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வர்த்தக வாணிபம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (01) சபையில் உரைநிகழ்த்திய அவர் கூறியதாவது,

“அந்நியச்செலாவணியை அதிகம் ஈட்டும் துறைகளில் கைத்தொழில்துறை பிரதானமானது. அரசு அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளால், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் பாதிப்புற்றுள்ளனர். நாட்டின் இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாக இவர்களுக்கு உதவ முடியாதுள்ளது. எனினும், பாரிய கைத்தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் அல்லது உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பைப்பேணி உதவிகளைப் பெறுகின்றனர். உள்ளூரில் பத்து, ஐம்பது பேர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களைப் பாதுகாக்க அமைச்சர் நளின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் ஆகியோர் கவனம் செலுத்துங்கள்.

சர்வதேச அளவில் முக்கியம் பெறும் மன்னார் தீவு, வெளிநாட்டுக் கம்பனிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதுறது. நமது நாட்டின் கடல், மணல் வளங்களைச் சூறையாடும் இக்கம்பனிகளின் செயற்பாடுகள் எல்லை கடந்துவிட்டன. இலஞ்சத்தையும் தரகுப்பணத்தையும் பெற்றுக்கொள்ளும் சில அரச அதிகாரிகளே, மண்வளத்தை அள்ளிச்செல்ல அனுமதிக்கின்றனர். போகிறபோக்கில், பொதுமக்களின் வீடுகளுக்குள் வந்தும் இக்கம்பனிகள் நில அகழ்வு செய்யும் போலுள்ளது. இவற்றை நிறுத்தி, புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் தொழில்வாண்மையாளர்களை நமது நாட்டின் கைத்தொழில்துறைகளில் முதலீடு செய்வதற்கு அழைக்க வேண்டும். நமது மண்வளமும் கடல் வளமுமே போதுமானது இந்நாட்டை மீட்க.

இவ்வளவு சிறப்புமிக்க நாட்டில் வாழும் எங்களை கடன்காரர்களாக ஆக்கிவிட்டனர் ராஜபக்ஷவினர். ஒருவருக்கு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் கடனுள்ளது. இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுக்க முடியும். என்னையும் எனது குடும்பத்தையும் போலிக்காரணங்கள் சுமத்தி சிறையிலடைத்தனர். இவர்களுக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்குத்தொடுக்கவுள்ளேன்.

பரந்தன் இரசாயனத்தொழிற்சாலைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் உள்ளன. இவற்றை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் சகோதரர்களுக்கு விற்று அல்லது குத்தகைக்கு வாழங்கி கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை கோருகிறேன். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்கள், இரும்புகள் எல்லாம் களவாடப்பட்டு அத்தொழிற்சாலை கைவிடப்பட்டுக் கிடக்கிறது. அப்பிரதேச மண்ணை அகழ்ந்து எங்கோ கொண்டு செல்கின்றனர் வெளிநாட்டுக் கம்பனியினர். புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலையில் சொந்த மாவட்ட மக்களுக்கு தொழில் வழங்கப்படவில்லை. வேறு பிரதேசத்தவருக்கே இங்கு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையால் புற்றுநோய் ஏற்படுவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள். நான் அமைச்சராக இருந்த காலத்தில் பிரதேசத்தவர்களுக்கே இங்கு தொழில் வழங்கினேன். ஆனாலும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகை சிங்கள சகோதரர்களுக்கு தொழிலை வழங்கினேன். அதிக அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள புல்மோட்டைக் கிராமத்தில், எந்த அபிவிருத்திகளும் செய்யப்படவில்லை. ஒரு வீதிகூட இங்கு அபிவிருத்தி செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

Related Post