Breaking
Sat. Dec 21st, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பொத்துவிலில் புதன்கிழமை (23) நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளர் என்.எச்.முனாஸை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“பொத்துவில் பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவம் அவசியம். இதற்காகவே, பல தடவைகள் எமது கட்சி இங்கு வேட்பளார்களை நிறுத்தியது. 2015 பொதுத் தேர்தலில், எஸ்.எஸ்.பி.மஜீதை வேட்பாளராக்கினோம். இந்த ஊரில் மாத்திரம் அவருக்கு 45000 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து வந்த பொதுத் தேர்தலில் முஷர்ரபை வேட்பாளராக்கினோம். பொத்துவில் மக்கள் வழங்கிய 95000 வாக்குகளுடன் வேறு பிரதேச வாக்குகளும் கிடைத்ததால், முஷர்ரப் எம்.பி.யாகத் தெரிவானார். இவரின் வெற்றிக்காக ஊரே உழைத்தது. பலரும் நிதியுதிவி செய்தனர். ஓட்டோ ஓடுபவர்கள், நாளாந்தத் தொழிலாளிகள் மற்றும் வெளிநாடுகளில் உழைப்போர் எனப் பலரும் நிதியுதவி வழங்கி முஷர்ரபை வெல்ல வைத்தனர். ஏன்? ஊரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்கே. ஆனால், அவர் செய்த வேலைகளால், பொத்துவில் நற்பெயருக்கே களங்கம் ஏற்பட்டது.

எமது மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட சாராயக் கடையைத் திறந்து, தனது பொக்கற்றை பலப்படுத்தினார். கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக மக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்தார். இவ்வாறானவர்களுக்கு எமது கட்சியில் இடமில்லை. இம்முறை மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர்.

டொக்டர் இஸ்ஸடீன் போட்டியிட முன்வந்தபோதும், சில சிக்கல்களால் அவர் விட்டுக்கொடுத்தார். இதனால், சகோதரர் முனாஸை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். பொத்துவில் பிரதேச சபை உறுப்பினராக இருந்த இவரிடம் நல்ல அனுபவங்கள் உள்ளன. மக்களும் இவரை மதிக்கின்றனர்.

எமது வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு  எம்.பி.க்களை வெல்ல முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் இன ஒற்றுமை அவசியம் பேணப்படல் வேண்டும். விஷேடமாக தமிழ் மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புங்கள். மூவினத்தவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். இங்குதான் அரசியல் ஆளுமைகள் வளர்க்கப்படுகின்றன. மக்களின் அமானிதமே எங்களுக்கு முக்கியம். இதனால், இம்முறை போட்டியிடும் சகல வேட்பாளர்களிடமும் உறுதியான சத்தியக்கடதாசி வாங்கியுள்ளோம். சமூகத்துக்கு துரோகமிழைப்போர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை” என்று கூறினார்.

Related Post