உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நிலையில் காணப்பட்டாலும் என்றாவது ஒருநாள் மீள் எழுச்சிபெறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றார்கள். ஆனாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கில் செயற்படுவதை சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
குறிப்பாக, விவசாயம் என்பது இந்த நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயிகள் மீதான அடக்குமுறையே கடந்த கோட்டா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய ஒரு காரணமாகும். எனவே, கோட்டா அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுள்ள புதிய ஜனாதிபதிக்கு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை இந்த உயர்சபையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் அதிகமான விவசாயிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடனிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தாலும், அவர்கள் அந்தத் திட்டத்தில் சரியான முறையில் உள்வாங்கப்படவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குவதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான காப்புறுதித் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என அறியமுடிகின்றது. அண்மையில் இடம்பெற்ற மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில், விவசாயிகள் மிகவும் வேதனையுடன் தாம் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை கூறியிருந்தார்கள். சில பகுதிகளில் குறிப்பிட்ட காப்புறுதித் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அவை ஒருதலைப்பட்சமாகவும் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் வழங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, விவசாய அமைச்சர் இந்த விடயத்தில் கவனஞ்செலுத்தி, கடனிலிருந்து விவசாயிகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோன்று, வட மாகாண மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் கடற்படையினரின் இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் பல சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளனர். எனவே, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர், இந்த விடயங்களில் கவனஞ்செலுத்தி, மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், நெல் கொள்வனவுக்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று எம்மிடம் முறையிடுகின்றனர். வியாபாரிகள் தங்களுக்கேற்றவகையில் விலையை நிர்ணயித்து, மிகவும் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்கின்றனர். இதனால் கடனிலிருக்கும் விவசாயிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள். எனவே, விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை. அல்குர்ஆனை அல்லது ஒரு அரபுப் புத்தகத்தை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அரபுப் புத்தகங்களை இந்த நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். உலக மக்கள் அனைவராலும் அறியப்படுகின்ற, போற்றப்படுகின்ற இஸ்லாமியர்களின் வேதநூலான அல்குர்ஆனைக் கூட இந்த நாட்டிற்குள் கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அரபுக் கல்லூரிக்கு தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர முடியாதுள்ளது. ஆன்லைனில் அனைத்துவிதமான புத்தகங்களையும் படிக்கக்கூடிய சூழலில் நாம் இருக்கின்ற போதும், இலங்கையில் மாத்திரமே இவ்வாறு புத்தகங்களைக் கொண்டுவருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள், அவர்களுக்கு தேவையான ஒரு புத்தகத்தை கொண்டுவரும் பட்சத்தில் அதை பறித்தெடுக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதி ஒரு நிமிடத்தில் தீர்வுகாண முடியும். எனவே, தற்போது பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு குறித்த கடிதத்தினை மீளப்பெற அறிவுறுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
அதேபோன்று, ராகமை வைத்தியசாலையில் அமைந்துள்ள பள்ளிவாசல் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. வைத்தியர்கள் மாத்திரமின்றி நோயாளர்களும் தொழுவதற்கு அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த மறுதினமே அந்த பள்ளிவாசலை மூடிவிட்டனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் அந்தப் பள்ளிவாசலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க விரும்புகின்றேன்.
நுவரெலியா, நோர்வூட் தோட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு போதிய வருமானம் இல்லை என்ற காரணத்தினால், பள்ளிவாசலுக்கு அண்மித்த காணியில், இஸ்லாமிய நிறுவனம் ஒன்றினால் ஐந்து வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. குறித்த ஐந்து வீடுகளையும் கட்டிமுடித்த பிற்பாடு, அங்குள்ள பிரதேச செயலாளர் அந்த வீடுகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பிரதேச மக்களுக்கு நீதிமன்றம் சென்று போராடுமளவுக்கு வசதியில்லை. ஆகையால், பிரதேச செயலாளருக்கு சாதகமாக ஐந்து வீடுகளையும் அரசுடைமையாக்கி ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளித்திருக்கிறார்கள். எவ்வளவு கேவலமான விடயம் இது? அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் ராமேஷ்வரன் எம்.பிக்கும் இது சம்பந்தமாக நான் கடிதம் அனுப்பியிருக்கின்றேன். தொலைபேசி ஊடாகவும் பலமுறை இந்த விடயம் தொடர்பில் பேசியிருக்கின்றேன். ஆனால், இந்த விடயத்தில் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில், காலம் காலமாக அவர்கள் உங்களுக்குத்தான் வாக்களிக்கின்றார்கள். எனவே, இவ்வாறான மோசமான வேலைகளை செய்வதை அனுமதிக்காதீர்கள். அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த வீடுகள் அமைந்துள்ள காணியை பள்ளிவாசலுக்கு எழுதிக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஜீவனிடமும், ராமேஷ்வரன் எம்.பியிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதேபோன்று, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், மஹர சிறைச்சாலை வளாகத்தில் 100 வருட காலத்துக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட பள்ளிவாசலை மூடிவைத்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம். ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றோம். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளோம். இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இவ்வாறான பல பிரச்சினைகளை எமது சமூகத்தினர் எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த விடயங்களில் கவனம் செலுத்தி, இவற்றுக்கான தீர்வுகளை மிகவும் துரிதமாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பொறுப்பான அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.